வெளிநாட்டு போன் அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி நூதன மோசடி
வெளிநாட்டு போன் அழைப்புகளை, உள்ளூர் போன் அழைப்புகளாக மாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த கேரள ஆசாமி கைது செய்யப்பட்டார்.
ஏர்டெல் டெலிபோன் நிறுவனம் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் பரபரப்பு புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், சென்னையில் சட்டத்திற்கு புறம்பான டெலிபோன் நிறுவனங்களை நடத்தி, வெளிநாட்டு போன் அழைப்புகளை, உள்ளூர் போன் அழைப்புகளாக மாற்றி லட்சக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தி பெரிய அளவில் மோசடிகள் அரங்கேற்றப்படுகிறது என்றும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும், டெலிபோன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியில் சட்டவிரோத போன் நிறுவனம் ஒன்று செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐஸ்-அவுஸ் பகுதியில் செயல்பட்ட சட்ட விரோத போன் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையில் நூற்றுக்கணக்கான சிம்கார்டுகள் மற்றும் 9 சிம்பாக்ஸ்கள், மோடம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராயப்பேட்டை மற்றும் சி.ஐ.டி. நகர் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் 1,700-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், 4 சிம்பாக்ஸ்கள், மோடம் கருவி போன்றவை கைப்பற்றப்பட்டது.
இதையொட்டி பஷீர் (வயது 35) என்ற கேரள ஆசாமி கைது செய்யப்பட்டார்.
கைதான பஷீரிடம் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சவூதிஅரேபியாவில் வசிக்கும் அப்துல்ரகுமான் என்பவர் மூலமாக சிம்கார்டுகள், சிம்பாக்ஸ்கள் மற்றும் மோடம் கருவிகள் வாங்கியதாக தெரியவந்தது. கைதான பஷீரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. சென்னை அமைந்தகரையில் கடந்த ஆண்டு இது போன்ற மோசடி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர், என்பது குறிப்பிடத்தக்கது.