போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் திட்டம்


போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் திட்டம்
x

கோடை வெயிலில் இருந்து காத்து கொள்ள போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தொடங்கி வைத்தார்.

மதுரை

கோடை வெயிலில் இருந்து காத்து கொள்ள போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்

கோடை வெயில் காலம் தற்போது தொடங்கி விட்டது. இந்த காலத்தில் போக்குவரத்து போலீசார் நடுரோட்டில் வெயிலில் நின்று தான் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொள்வர். அந்த வெயிலால் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை போக்குவரத்து போலீசாருக்கு காலை, மாலை என இருவேளையும் நீர்மோர் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

அதன்படி மதுரை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் திட்டம் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் தொடக்கவிழா கோரிப்பாளையம் சிக்னல் அருகே நேற்று காலை நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகச்சாமி தலைமை தாங்கினார். கூடுதல் போக்குவரத்து துணை கமிஷனர் திருமலைக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் மற்றும், வெயிலில் இருந்து கண்களை பாதுகாத்து கொள்ள கூலிங் கிளாஸ் ஆகியவற்றை வழங்கினார்.

ஒருவழிப்பாதை திட்டம்

பின்னர் கமிஷனர் கூறும் போது, அரசு உத்தரவின்படி கோடைக்காலத்தில் வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 336 பேருக்கு நீர்மோர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. காலை, மாலை என இருவேளையும் அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு சென்று இதனை வழங்க உள்ளோம். நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் நெரிசலை குறைப்பதற்காக பனகல் சாலை உள்ளிட்ட 2 இடங்களில் ஒருவழிப்பாதை திட்டத்தை கொண்டு வரஉள்ளோம். அது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்னர் தான் அந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்.

இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து உதவி கமிஷனர் மாரியப்பன், செல்வின், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, கார்த்தி, ரமேஷ்குமார், கணேஷ்ராம், நந்தகுமார், ஷோபனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story