"ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு...." - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளிக் கல்வித்துறையின் அலுவலகங்களில் பணி புரியக்கூடிய மாவட்ட கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டோர்,1.6.2022 அன்றைய நிலவரப்படி, மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து இருந்தால், அவர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கலந்தாய்வு நடத்தி அனைவரும் பணியிட மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கலந்தாய்வானது வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வின் போது மாவட்டத்திற்குள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது,
- மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, மாறுதல் பெற அறிவுறுத்த வேண்டும்.
- 01.06.2022 அன்றைய நிலையில் பிற அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைச்சு / பொதுப் பணியாளர்களைத் தங்கள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்தி பிற அலுவலகங்களுக்கு மாறுதல் வழங்கப்பட வேண்டும்.
- அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
- கோயம்புத்தூர் மற்றும் மதுரை மண்டல கணக்கு (தணிக்கை) அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மாறுதல் கலந்தாய்வில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
- அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியப் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொண்டு புதிய பணியிடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.
- பட்டியலில் உள்ளபடி மாறுதல் கலந்தாய்வின்போது கலந்துகொள்ள வேண்டிய பணியாளர்கள், கலந்து கொள்ளாத நிலையில் அப்பணியாளர்களுக்கு நிருவாக மாறுதல் அளிக்கப்படும்.
- தங்கள் வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் செய்யும்போது மாவட்டத்திற்குள் பணியிடம் இல்லாத நிலையிலோ, பணியாளர் வேறு மாவட்டத்தைக் கோரும் போதோ, அப்பணியாளர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள, அவர்தம் பட்டியலை ஆணையரகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலில் செல்வதற்கான வாய்ப்பு இல்லாதபட்சத்தில் அப்பணியாளர்களது பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
- பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு பாரிவை (4)இல் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
- மேற்கண்ட மாறுதல் அனைத்து மாவட்டங்களிலும் பட்டியலில் குறிப்பிடப்பட்ட நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை மாவட்டத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கல்வி வளாக அலுவலகப் பணியாளர்கள் அனைவரையும் ஒரே அலகாக கருதி ஆணையரகத்தில் இணைப்பில் கண்ட பட்டியலில் குறிப்பிட்டவாறு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.
- ஒரே பணியிடத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிமாறுதல் கோரும்நிலையில் பணியாளரின் பதவியில் சேர்ந்த நாளினை முன்னுரிமையாக கருதப்பட வேண்டும்.
- மூன்றாண்டு பணிமுடித்த பணியாளர்கள் கட்டாய மாறுதனுக்குத் தகுதியுடையவராய் இருந்த போதிலும் சில பணியாளர்கள் எதிர்வரும் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பாராயின்" மூன்றாண்டுகளுக்கான மாறுதல் அளிக்கத் தேவையில்லை.
மேற்கண்ட விதிமுறைகளை தவறாது பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமின்றி செவ்வனே செயல்படுத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.