ரூ.2 ஆயிரம் பணத்தை தொலைத்ததால் பள்ளி மாணவி தற்கொலை
ரூ.2 ஆயிரம் பணத்தை தொலைத்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன்மலை சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 44). இவருடைய மனைவி விஜயகுமாரி. இவர்களுடைய மகள் ராகவி (15). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று விஜயகுமாரி, ராகவியிடம் ரூ.2 ஆயிரம் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு கூறி உள்ளார். ஆனால் அந்த பணத்தை ராகவி தொலைத்து விட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த விஜயகுமாரி ராகவியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராகவி, வீட்டில் வைத்து விஷம் குடித்து விட்டார்.
மயங்கிய நிலையில் கிடந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேராப்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ராகவி, பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ராஜா கரியாலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.