படப்பை அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு


படப்பை அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x

படப்பை அருகே பணம் கேட்டு மிரட்டி 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எருமையூர் ராஜாகோபால் கண்டிகை மலைத்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42), இவருடைய மனைவி வள்ளி (35), இவர்கள் அந்த பகுதியில் டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகின்றனர். ஏழுமலைக்கு உதவியாக அவருடைய தம்பி அயன் என்கிற பழனி (வயது 35) கடையில் இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பழனியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பழனி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் பழனியை அரிவாளால் வெட்டி உள்ளனர். வெட்டுக்காயத்துடன் பழனி கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதை கேட்டு பழனியின் சகோதரர் ஏழுமலை, மனைவி வள்ளி ஆகியோர் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்து தடுக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் அவர்களையும் அரிவாளால் வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சோமங்கலம் போலீசார் வெட்டு காயங்களுடன் இருந்த 3 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story