பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு சீல் வைப்பு
மத்திய அரசின் தடை உத்தரவு எதிரொலியாக ராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மத்திய அரசின் தடை உத்தரவு எதிரொலியாக ராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தடை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பலரை கைது செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் மத்திய அரசு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடைவிதித்தது.
மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பி.எப்.ஐ. அமைப்புக்கு தடைவித்து, அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
சீல் வைப்பு
நேற்று காலை ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள கட்டிடத்தில் இதுவரை இயங்கி வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் மரகதநாதன் தலைமையில் தாசில்தார் முருகேசன் மற்றும் போலீசார் சென்றனர். அங்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதற்கான உத்தரவு நகலினை அலுவலக கதவின் வாசலில் ஒட்டினர்.
இதுபற்றி அறிந்த சிலர் அந்த அலுவலக பகுதிக்கு திரண்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.