குமாரபாளையத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய 3 சாயப்பட்டறைகளுக்கு `சீல்'
குமாரபாளையம்:
குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது அனுமதி பெற்று 50-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து சாயக்கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதன் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த ஒரு வார காலமாக குமாரபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
அதில் அனுமதி பெற்று இயங்கக்கூடிய சாயத்தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் சாக்கடை கால்வாயில் வெளியேற்றியது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 3 சாயப்பட்டறைகளையும் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிவண்ணன் தலைமையில் வருவாய் துறையினர் பூட்டி `சீல்' வைத்தனர். அப்போது சீல் வைப்புக்கு சாயப்பட்டறை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.