அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு 'சீல்' வைப்பு


அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 4 Oct 2023 8:00 PM GMT (Updated: 4 Oct 2023 8:00 PM GMT)

தேனியில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.

தேனி

மதுபான பார்

தேனி பழைய பஸ் நிலையம் எதிரே காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வாய்க்கால் கரையோரம் அனுமதியின்றி மதுபான பார் செயல்பட்டு வந்தது. இந்த பார் மும்முரமாக செயல்படுவது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கும் தகவல் கிடைத்தது.

உடனடியாக அவர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார் நேற்று காலையில் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

'சீல்' வைப்பு

அப்போது அங்கு வாய்க்கால் கரையோரம் பெரிய அளவில் தகர கொட்டகை அமைத்து மதுபான பார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாரை இழுத்து மூடி போலீசார் 'சீல்' வைத்தனர். இதை அறியாமல் மதுபான பிரியர்கள் பலர் நேற்று பகலில் அங்கு வழக்கம்போல் மது அருந்த வந்தனர். பாருக்கு 'சீல்' வைக்கப்பட்ட நிலையில் மதுபானம் கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன் சிலர் அங்கேயே திரண்டு நின்றனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று மதுபான பிரியர்களை அங்கிருந்து துரத்தினர்.

அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பார், பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதற்கு இடைப்பட்ட பகுதியில் தான் தினமும் காலை முதல் இரவு வரை போலீசார் வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

பின்னணியில் யார்?

அப்படிப்பட்ட இடத்தில் அனுமதியின்றி மதுபான பார் வெளிப்படையாக செயல்பட்டும் மதுவிலக்கு போலீசாரோ, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகளோ, டாஸ்மாக் நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது மக்களிடம் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த மதுபான பாரை நடத்தியது யார்? அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story