தரச்சான்றிதழ் பெறாத குடிநீர் நிறுவனத்திற்கு சீல்
பரமக்குடி அருகே தரச்சான்றிதழ் பெறாத குடிநீர் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று மாவட்டம் முழுவதும் குடிநீர் நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் நிறுவனங்களில் அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர். குடிநீர் நிறுவனங்கள் உரிய தகுதி மற்றும் தரச்சான்றிதழ் பெற்றுள்ளதா, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடி பகுதியில் தனியார் குடிநீர் நிறுவனம் ஒன்று பி.ஐ.எஸ். எனப்படும் தரச்சான்றிதழ் பெறாமல் இயங்கி வந்ததும் குடிநீர் வினியோகம் செய்து வந்ததும் தெரிந்தது, குடிநீரின் வண்ண சோதனை, வாசனை சோதனை, சுவை, கொந்தளிப்பு சோதனை, மொத்த கரைந்த திடப்பொருள் சோதனை, ரசாயன சோதனை முதலியவை ஆய்வு செய்து இந்த சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்றால்தான் குடிநீர் வினியோகம் செய்ய முடியும். இதனை தொடர்ந்து தற்காலிகமாக அந்த குடிநீர் நிறுவனத்தினை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் தரச்சான்றிதழ் பெற்ற பின்னர்தான் நிறுவனத்தினை நடத்த முடியும் என்று எச்சரித்து சென்றனர். தொடர்ந்து முதுகுளத்தூர், கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெறும் என்றும் பொதுமக்களுக்கு தரமான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.