புத்தாண்டையொட்டி ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்...!


புத்தாண்டையொட்டி ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்...!
x

கோப்புப்படம் 

தமிழகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

சென்னை,

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இன்று இரவு 8 மணியில் இருந்து புத்தாண்டு தினமான நாளை காலை 6 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சுமார் 1,500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ச்சியாக ரெயில் நிலையங்களில் சோதனையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story