உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை


உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
x

நாமக்கல் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்

தரமான விதைகள்

இது தொடர்பாக சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மை உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் முக்கிய பங்கு வகிப்பது விதைகள் ஆகும். விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகள் உரிய முளைப்பு திறனுடனும், தரத்துடனும் வினியோகம் செய்வதை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் விதை ஆய்வு பிரிவு கண்காணித்து வருகிறது.

விவசாயிகளுக்கு சான்று பெற்ற தரமான விதைகள் மட்டுமே வினியோகம் செய்யும் பொருட்டு அரசு நிறுவனங்கள், அரசுசார் நிறுவனங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களுக்கு விதை விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது.

சட்டப்படி நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விதை விற்பனையாளர்களும் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதேபோல் மொத்த விதை விற்பனையாளர்கள் சில்லரை விற்பனையாளர்களுக்கு விதை விற்பனை செய்யும் போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விதை விற்பனை உரிமம் பெற்றுள்ளனரா ? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தவறும்பட்சத்தில் விதை வினியோகம் செய்தவர், விதை விற்பனை உரிமம் இல்லாமல் விதை வாங்கியவர் என சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பம் செய்வோர் https://seedcertification.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் உரிய ஆவணங்களான அ- படிவம் 2 நகல்கள், விதை விற்பனை இடத்திற்கான பத்திரம் நகல் (சொந்த இடமாக இருப்பின்) அல்லது வாடகை ஒப்பந்த பத்திரம், இடத்தின் வரைபடம், விண்ணப்பதாரரின் ஆதார் நகலுடன் ரூ.1000-க்கான புதிய உரிமத்திற்கான விண்ணப்ப கட்டண சலான் ஆகியவற்றை சேலம், விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு விதை ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று வாங்கி, தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story