பழைய கட்டிடத்தில் பதுக்கப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பழைய கட்டிடத்தில் பதுக்கப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
திருவெறும்பூர்:
போலீசார் ரோந்து
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவின்படி, திருச்சி மத்திய மண்டலத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை திருவெறும்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது அங்குள்ள கூத்தைப்பார் அருகே பத்தாளபேட்டை கிராமத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக திருவெறும்பூர் தாலுகா வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரும், போலீசாரும் இணைந்து அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பழைய கட்டிடத்தின் ஒரு அறையில் 99 மூட்டைகளில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி இருந்தது. அரிசி மூட்டைகளை காட்டூரை சேர்ந்த நஸ்ருதீன் பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 99 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள நஸ்ருதீனை தேடி வருகிறார்கள்.