ரூ.5 லட்சம் உயர்ரக போதைப்பொருள் பறிமுதல்


ரூ.5 லட்சம் உயர்ரக போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Sep 2023 7:00 PM GMT (Updated: 29 Sep 2023 7:00 PM GMT)

தொண்டாமுத்தூரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநில பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்
கோவை


தொண்டாமுத்தூரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநில பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


உயர்ரக போதை பொருள்


கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தொண்டாமுத்தூர் பகுதியில் உயர் ரக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்படி தொண்டாமுத்தூர் போலீசார், தொண்டாமுத்தூர் கிழக்கு தெருவில் உள்ள ஒரு தனியார் பாக்கு செட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 8 மில்லி கிராம் முதல் 20 மில்லி கிராம் வரை குப்பிகளில் உயர் ரக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.


2 பேர் கைது


அங்கு மொத்தம் 175 குப்பிகளில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 25 கிராம் உயர்ரக போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 36), நூர்கல் இஸ்லாம் என்பவரின் மனைவி அஸ்மா (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஜாகிர் உசேன், அஸ்மா ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-


இந்த உயர்ரக போதைப்பொருள் அசாம் மாநிலத்தில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அதை ஜாகிர் உசேன் அங்கிருந்து கடத்தி வந்து தொண்டாமுத்தூரில் தங்கி பணிபுரியும் நூர்கல் இஸ்லாம் என்பவரின் மனைவி அஸ்மாவிடம் கொடுத்து வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து உள்ளார்.


ஆய்வகத்துக்கு அனுப்பினர்


அவர்கள் 2 பேரும் ரகசியமாக போதைப்பொருளை விற்பனை செய்து வந்து உள்ளனர். உயர் ரக போதைப்பொருள் ஒரு குப்பி ரூ.2,500 வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

அதை நுகர்ந்தால் சில மணி நேரம் போதை இருக்கும் என்று தெரிகிறது. இது எந்த வகையான போதை பொருள் என்பதை கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story