தாம்பரம் அருகே பொது இடத்தில் கழிவுநீரை திறந்துவிட்ட கழிவுநீர் லாரி பறிமுதல்


தாம்பரம் அருகே பொது இடத்தில் கழிவுநீரை திறந்துவிட்ட கழிவுநீர் லாரி பறிமுதல்
x

தாம்பரம் அருகே பொது இடத்தில் கழிவுநீரை திறந்துவிட்ட கழிவுநீர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் லாரிகள் இயங்க மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத வாகனங்கள் மாநகராட்சி பகுதிகளில் இயங்க அனுமதி இல்லை. திறந்த வெளியில் கழிவுநீர் கொட்டக்கூடாது. சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கொட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தாம்பரம் அருகே கழிவுநீர் ஏற்றிவந்த லாாி ஒன்று, தாம்பரம்-மதுரவாயல் சர்வீஸ் சாலையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் திறந்த வெளியில் கழிவுநீரை திறந்துவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், கழிவுநீர் லாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டறிந்தனர். பின்னர் கழிவுநீர் லாரியை பறிமுதல் செய்து சங்கர்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டது.

கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், பொது கால்வாய்களிலோ, நீர்நிலைகளிலோ, ஆற்றுப்படுகைகளிலோ கழிவுநீரை கொட்டுவது கண்டறியப்பட்டால் லாரியை பறிமுதல் செய்வதுடன், அதன் உரிமையாளர் மீது சட்டப்படி மாநகராட்சி மற்றும் போலீஸ் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாம்பரம் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story