சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா கேக் விற்பனை; புதிய போதை கலாசாரத்தை பரப்பிய ஓட்டல் அதிபர் உள்பட 5 பேர் கைது
சென்னையில் கஞ்சாவில் கேக் செய்து கல்லூரி மாணவர்களுக்கு விற்ற ஓட்டல் அதிபர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கேக் விற்பனை
போதைப்பொருட்களை வித, வித தொழில் நுட்பத்துடன் வாடிக்கையாளர்களுக்கு குற்றவாளிகள் சப்ளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் கஞ்சாவை சாக்லெட்டாக செய்து கல்லூரி மாணவர்களுக்கு விற்றனர். இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
கஞ்சா சாக்லெட் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தார்கள். இதனால் போதைப்பொருள் விற்பனை கும்பல் கஞ்சாவில் கேக் செய்து விற்க ஆரம்பித்து விட்டார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் விற்பனை அமோகமாக நடப்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பலை கூண்டோடு பிடிக்க, இன்ஸ்பெக்டர் சேட்டு, சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஓட்டல் அதிபர் பிடிபட்டார்
நுங்கம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் விஜயரோஷன் டேக்கா மற்றும் பச்சை குத்தும் நிறுவனம் நடத்தி வந்த தாமஸ் ஆகிய இருவரை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா கேக் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை பொடி செய்து, கேக்கில் கலந்து விற்றனர்.
இதுபோல போதை மாத்திரையை தூள் செய்தும் விற்றனர். மேலும் போதை ஸ்டாம்ப் என்று அழைக்கப்படும் ஸ்டிக்கர் ஒன்றையும் விற்றனர். இது மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது. இதை நாக்கின் உள் பகுதியில் தடவினால் போதை வரும் என்று சொல்லப்படுகிறது.
விஜயரோஷன் டேக்கா, தாமஸ் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சொன்ன தகவலின் பேரில் கார்த்திக், ஆகாஷ், பவன் கல்யாண் ஆகிய மேலும் 3 பேர் கைதானார்கள்.
பெங்களூருவில் இருந்து.....
இவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து போதை மாத்திரை மற்றும் போதை ஸ்டாம்ப் போன்றவை அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தனர். 150 கிராம் எடையுள்ள கஞ்சா கேக் ரூ.500 வரை விற்கப்படுவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.