செம்பியம்மன் கோவில் தேரோட்டம்


செம்பியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 2 Sep 2023 6:45 PM GMT (Updated: 2 Sep 2023 6:46 PM GMT)

சங்கராபுரம் அருகே உள்ள செம்பியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

செம்பியம்மன் கோவில்

சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் செம்பியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திரு விழா வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா பரவல் போன்ற சில காரணங்களால் கடந்த 18 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் தள்ளி போனது.

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த 25-ந் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து சக்தி அழைத்தல், முளைப்பாரி எடுத்தல், ஊர் தேவதைகளுக்கு ஊரணி பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், அம்மன் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் செம்பியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் செம்பியம்மன் எழுந்தருளினார். தீபாராதனை காண்பித்தும் அங்கிருந்த திரளான பக்தர்கள் ஓம் சக்தி, பரா சக்தி என்று கோஷம் எழுப்பியபடியும் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நிலையை வந்தடைகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.


Next Story