ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது


ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் 90 சென்ட் நிலத்தை வாங்கினார்.

இதையடுத்து அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய சுப்பிரமணி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இது தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாலு என்பவர், பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என்றால் லஞ்சமாக ரூ.15 ஆயிரம் தர வேண்டும் என்று சுப்பிரமணி மற்றும் அவருடைய மகன் மணியிடம் கூறியுள்ளார். அதற்கு சுப்பிரமணி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பின்னர் ரூ.10 ஆயிரம் தந்தால் தான் பட்டா மாற்றம் செய்து தரமுடியும் என பாலு கூறியுள்ளார்.

கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணி இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மணி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கு பணியில் இருந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலுவிடம் பணத்தை கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ், இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் மற்றும் போலீசார் கையும், களவுமாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலுவை பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story