சென்னை சூளையில் பரபரப்பு; குப்பை தொட்டியில் கிடந்த நடராஜர் சிலை - போலீசார் கைப்பற்றி விசாரணை


சென்னை சூளையில் பரபரப்பு; குப்பை தொட்டியில் கிடந்த நடராஜர் சிலை - போலீசார் கைப்பற்றி விசாரணை
x

சென்னை சூளையில் குப்பை தொட்டியில் கிடந்த நடராஜர் சிலையை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை

சென்னை சூளை ஜெனரல் காலின்ஸ் சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள குப்பை தொட்டியில் உள்ள குப்பையை அள்ளும் பணியில் மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர்கள் பரமேஸ்வரி, கவுரி ஆகியோர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பை தொட்டியில் மர்ம பை ஒன்று காணப்பட்டது.

அந்த பையை ஊழியர்கள் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் பித்தளையால் செய்யப்பட்ட அழகான 3 அடி உயர நடராஜர் சிலை ஒன்று காணப்பட்டது. உடனே அந்த சிலையை வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிலையை கைப்பற்றிய வேப்பேரி உதவி போலீஸ் கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர், அது குறித்து விசாரணை நடத்தினார்கள். ஏதாவது கோவிலில் இருந்து திருடி, அதை கொண்டு செல்ல முடியாமல், மர்ம நபர்கள் சிலையை குப்பை தொட்டியில் வீசிச்சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், சிலை ஒப்படைக்கப்படும் என்று வேப்பேரி போலீசார் தெரிவித்தனர். இந்த குப்பை தொட்டி சிலை விவகாரம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story