'செந்தில் பாலாஜி முதல்-அமைச்சர் சொல்லியோ அல்லது அவராகவோ பதவி விலகலாம்' - சபாநாயகர் அப்பாவு


செந்தில் பாலாஜி முதல்-அமைச்சர் சொல்லியோ அல்லது அவராகவோ பதவி விலகலாம் - சபாநாயகர் அப்பாவு
x

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி முதல்-அமைச்சர் சொல்லியோ அல்லது அவராகவோ விலகலாம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 13-ந்தேதி இரவு கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு வரும் 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்கவும், செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவு செய்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பியது.

ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க கவர்னர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கான இலாகா மாற்றத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அவர் அமைச்சராக தொடர முடியாது எனக்கூறி முதல்-அமைச்சரின் பரிந்துரையை கவர்னர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு, "செந்தில் பாலாஜி முதல்-அமைச்சர் சொல்லியோ அல்லது அவராகவோ பதவி விலகலாம். இல்லையெனில் அந்த பதவியில் அவர் தொடர்வார்" என்று தெரிவித்தார். மேலும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story