தொடர் விபத்துகள் எதிரொலி:கூடலூர்-கேரளா சாலையோரம் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி


தொடர் விபத்துகள் எதிரொலி:கூடலூர்-கேரளா சாலையோரம் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விபத்துகள் எதிரொலியால் கூடலூர்- கேரளா சாலையோரம் முக்கிய இடங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

தொடர் விபத்துகள் எதிரொலியால் கூடலூர்- கேரளா சாலையோரம் முக்கிய இடங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர் விபத்துகள்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் கூடலூரில் இருந்து மலப்புரம் மற்றும் வயநாடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளில் இரவு -பகலாக சுற்றுலா வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 2-ம் மைல், பாடந்தொரை உள்பட பல இடங்களில் கடந்த சில தினங்களாக வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள் காயமடைந்து தங்களது ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் வாகனங்களும் சேதமடைந்து வந்தது.

ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி

இது தொடர்பாக தேவர்சோலை போலீசார் தொடர் விபத்துக்கள் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரும்பாலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாடந்தொரை உள்படமுக்கிய இடங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டுமென நெடுஞ்சாலைத்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று விபத்துகள் நடைபெறும் அபாயம் உள்ள இடங்களில் சாலையோரம் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் தடுப்புகள் பொருத்தும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் கூறும்போது, வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் நிலை குறித்து அறிவதில்லை, இதை உணர்த்தும் வகையில் சாலையின் கரையோரம் முக்கிய இடங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள், தடுப்புகள் பொருத்தப்பட்டு வருகிறது. இதனால் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story