25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது
கோவை அருகே முதியவர் வீட்டில் 25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டின் மேற்கூரையில் பதுக்கி வைத்திருந்த நகைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
போத்தனூர்
கோவை அருகே முதியவர் வீட்டில் 25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டின் மேற்கூரையில் பதுக்கி வைத்திருந்த நகைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-
25 பவுன் நகைகள் திருட்டு
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலன் (வயது 72), தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார். இவருடைய மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இதனால் தங்கவேலன், வீட்டு வேலைகளை செய்வதற்காக வெள்ளலூரை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை நியமித்தார்.
இந்த நிலையில் வீட்டில் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் திருட்டுபோனது. இதுகுறித்து தங்கவேலன், தனது அண்ணன் மகன் காந்தரூபனிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.
வேலைக்கார பெண் கைது
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது போலீசார் சந்தேகத்தின் பேரில் வேலைக்கார பெண் மகேஸ்வரியிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவர் திருடிய நகைகளை வீட்டின் மேற்கூரையில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த 25 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.மகேஸ்வரியும் தான் திருடியதையும், நகைகளை பதுக்கி வைத்ததையும் ஒப்புக்கொண்டார்.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு
பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மகேஸ்வரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும், மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததாலும் நகையை திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.வேலை பார்த்த வீட்டிலேயே 25 பவுன் நகையை வேலைக்கார பெண் திருடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.