சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கரூர்

பாலியல் தொந்தரவு

திருச்சி மாவட்டம், பார்வதிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நிலவொளி (வயது 42). திண்டுக்கல் மாவட்டம் சித்திரைப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் யுவராஜ் (38). இவர்கள் 2 பேரும் கரூர் மாவட்டம் கருப்பூர் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தாய் லாலாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கடந்த 1-7-2022-அன்று நிலவொளி, யுவராஜ் ஆகிய 2 பேரையும் லாலாலாபேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதையடுத்து நிலவொளி, யுவராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் நிலவொளி, யுவராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலவொளி, யுவராஜ் ஆகியோரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை லாலாபேட்டை போலீசார் வழங்கினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நிருபர்களிடம் கூறுகையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும், குழந்தை திருமணம் மற்றும் திருமணத்திற்காக குழந்தைகளை கடத்துவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் ரீதியான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story