சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டில் வியாபாரிகள் கடையடைப்பு- போராட்டம்
வாணாபுரம் தாலுகா பிரித்ததை மறுவரையறை செய்யக்கோரி சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
சங்கராபுரம்
கடையடைப்பு
வாணாபுரம் தாலுகா பிரித்ததை மறு வரையறை செய்யக்கோரி சங்கராபுரம் அனைத்து பொது சேவை கூட்டமைப்பு சார்பில் சங்கராபுரத்தில் நேற்று காலை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மும்முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொது சேவை கூட்டமைப்பு தலைவர் ஜனார்த்தனன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், தேவபாண்டலம் வணிகர் சங்க தலைவர் செந்தில், புதுப்பட்டு வணிகர் சங்க தலைவர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.
வடபொன்பரப்பி குறுவட்டம்
இதில் கலந்துகொண்டவர்கள் சங்கராபுரம் தாலுகாவில் இருந்த அரியலூர், வடபொன்பரப்பி ஆகிய 2 குறுவட்டங்களை புதிதாக உருவாக்கப்பட்ட வாணாபுரம் தாலுகாவில் இணைத்தது குறித்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை குறித்தும், சங்கராபுரத்துக்கு அருகில் உள்ள மூங்கில்துறைப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டி, ராவத்தநல்லூர், புதுப்பட்டு, மேல்சிறுவள்ளூர் வடபொன்பரப்பி உள்ளிட்ட 23 கிராமங்கள் அடங்கிய வடபொன்பரப்பி குறுவட்டத்தை மட்டும் சங்கராபுரத்தில் இணைக்ககோரியும் கோஷம் எழுப்பினர்.
சாலை மறியல்
பின்னர் அவர்கள் திடீரென கள்ளக்குறிச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் மகேந்திரன், சிகாமணி, பிரகாசம், அக்பர், அசோக்குமார், சுதாகர், மூர்த்தி, சக்கரவர்த்தி, உமர்பாஷா, ராஜா, பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் உள்பட 46 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். பின்னா் அவர்களை மதியம் 3 மணியளவில் போலீசார் விடுவித்தனர்.
வாணாபுரம் தாலுகா பிரித்ததை மறுவரையறை செய்யக்கோரி பொதுசேவை அமைப்பினரின் அடுத்தடுத்த போராட்டத்தால் சங்கராபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டில்
அதேபோல் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மூங்கில்துறைப்பட்டு 4 முனை சந்திப்பில் அனைத்து வியாபாரி சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் ஏ.எஸ்.வாசன், மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கனகராஜ் வரவேற்றார்.
மூங்கில்துறைப்பட்டு மற்றும் வட பொன்பரப்பி குறு வட்டத்துக்குட்பட்ட லக்கி நாயக்கன்பட்டி, புளியங்கோட்டை, புதுப்பட்டு மேல்சிறுவள்ளூர், சவேரியார்பாளையம், பொரசப்பட்டு, அருளம்பாடி உள்ளிட்ட 23 வருவாய் கிராமங்களை சங்கராபுரம் தாலுகாவுடன் இணைக்க வேண்டும், சங்கராபுரத்தில் மீண்டும் தாலுகா அலுவலகம் செயல்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் பெருமாள், தர்பார், சலீம், ஜெயபால், சரவணன், கார்த்திக், இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கோகுல்ராம் நன்றி கூறினார்.