தென்காசியில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்
படப்பிடிப்பை நடத்துவதற்கு உரிய அனுமதிகளைப் பெற்று அதற்கான சான்றிதழ்களை கலெக்டரிடம் படக்குழுவினர் சமர்ப்பித்தனர்.
தென்காசி,
தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பின் போது குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த படப்பிடிப்பை நடத்துவதற்கு படக்குழுவினர் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். அதன்படி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதற்கு உரிய அனுமதிகளைப் பெற்று அதற்கான சான்றிதழ்களை கலெக்டரிடம் படக்குழுவினர் சமர்ப்பித்தனர். இதையடுத்து 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்புக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.