கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் எழுதுவதற்கு வணிகர்கள் முன்வர வேண்டும் - ராமதாஸ்


கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் எழுதுவதற்கு வணிகர்கள் முன்வர வேண்டும் - ராமதாஸ்
x

தமிழகம் முழுவதும் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் எழுதுவதற்கு வணிகர்கள் முன்வர வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் எழுதுவதற்கு வணிகர்கள் முன்வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தான் முழங்கினோம். ஆனால், எங்குமே தமிழ் இல்லை என்பது தான் கசக்கும் உண்மை. எங்கும் தமிழ் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பவை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள். சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் மின்னுகின்றன. ஆனால், தனித்தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

1997-ம் ஆண்டில் தொடங்கி தற்போது வரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள தமிழில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இப்போதும் அதற்காகத் தான் தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார பயணத்தை சென்னையிலிருந்து மதுரைக்கு மேற்கொண்டேன்.

ஆனால், அந்த பயணத்திலும் கடைகளின் பெயர்ப்பலகைகள் உள்பட எங்கும் தமிழைக் காண முடியவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் அமைக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜி.கே. மணி அண்மையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்களும் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி பெயர்ப்பலகைகளை விரைவில் மாற்றுவதாக வாக்குறுதி அளித்து உள்ளனர். அதைக் கேட்ட போது எனது இதயம் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் துள்ளிக் குதித்தது. விழிப்புணர்வு பெற்ற வணிகப் பெருமக்களே, அதிக அளவாக அடுத்த ஒரு மாதத்திற்குள் உங்கள் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் மாற்றி எழுதுங்கள்.

பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும். வெளிநாடுகளில் தமிழ் வளர்த்த உங்களால் உள்நாட்டில் தமிழ் வளர்க்க கண்டிப்பாக இயலும். அவ்வாறு தமிழில் பெயர்ப்பலகை அமைக்கும் வணிகர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து பாராட்டுவதற்கு நான் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story