கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் கடைகள் அடைப்பு
கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
ராமேசுவரம்,
கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
கடைகள் அடைப்பு
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆகம விதிமுறைகளை மீறி பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள இணை ஆணையரை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும், பக்தர்களுக்கு இடையூறாக கோவிலின் பிரகாரங்களில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை நிரந்தரமாக அகற்றவும், அது போல் உள்ளூர் பக்தர்கள் வழக்கமான பாதையில் எந்தவித இடையூறும் இல்லாமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நல பாதுகாப்பு பேரவையின் சார்பில் ராமேசுவரத்தில் நேற்று பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து ராமேசுவரம் கோவில் ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரை, கடை தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் அனைத்து முக்கியமான இடங்களிலும் நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்த வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அக்னி தீர்த்த கடற்கரையில் நேற்று புரோகிதர்கள் யாரும் திதி தர்ப்பணம் பூஜைகள் செய்யாமல் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
வெறிச்சோடிய சாலைகள்
ராமேசுவரம் நகரில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டிருந்ததால் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
பெரும்பாலான ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களும் நேற்று ஓடாமல் இருந்தன.
இதேபோல் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் ராமேசுவரம் கோவில் ரத வீதி அக்னிதீர்த்த கடற்கரை நகரின் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சற்று வெறிச்சோடியே காணப்பட்டன.
மீனவர்களும் வேலை நிறுத்தம்
அதுபோல் கோவில் வழக்கம்போல் திறக்கப்பட்டு இருந்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடி விட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ராமேசுவரத்தில் நேற்று 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ராமேசுவரம் நகரின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் என்.எஸ்.கே.வீதி வேர்க்கோடு தேவர் சிலை அருகில் உள்ள பகுதிகளில் நேற்று வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.