சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடியில் திட்டம்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு


சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடியில் திட்டம்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:45 PM GMT)

கர்நாடகத்தில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடியில் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடியில் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

மொராஜி தேசாய் பள்ளிகளின்...

பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று சிறுபான்மையினர் நலன், ஹஜ், வக்பு போர்டு துறைகளை சேர்ந்த மந்திரிகள், அரசு அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இதில், வீட்டுவசதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஜமீர் அகமதுகான், நகராட்சி மற்றும் வக்பு போர்டு மந்திரி ரகீம் கான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மொராஜி தேசாய் உண்டு, உறைவிட பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும், அங்கு மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இதற்காக மொராஜி தேசாய் பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்காக கூடுதல் இடங்களை ஒதுக்கும்படியும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கடன் தொகை அதிகரிப்பு

அதே நேரத்தில் அறிவு திட்டத்தின் கீழ் சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், அந்த சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்தால், அதற்காக அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி கடன் தொகை அதிகரிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

அப்போது சிறுபான்மையினர் வசிக்கும் காலனிகளின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடியில் திட்டம் தொடங்கப்பட்டு, கட்டுமான பணிகள் உள்ளிட்டவை தொடங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சிறுபான்மையினர் நலத்துறைக்காக பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்ட 19 திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

16 திட்டங்கள் அமல்

அப்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 19 திட்டங்களில், 16 திட்டங்களை இதுவரை அமல்படுத்தி செயல்படுத்தி வருவதாக முதல்-மந்திரியிடம், அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் அந்த 16 திட்டங்களை அமல்படுத்தி இருப்பது குறித்து அரசாணையும் வெளியிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மற்ற 3 திட்டங்களையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் வீட்டுவசதி துறை சார்பில் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்தும் அதிகாரிகளுடன், சித்தராமையா ஆலோசித்தார். அப்போது ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், அந்த வீடுகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வீட்டுவசதி துறை மந்திரி ஜமீர் அகமதுகானும், அதிகாரிகளும் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் தெரிவித்தனர்.


Next Story