அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x

பிலிக்கல்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

சுகாதார நிலையம்

பரமத்திவேலூர் தாலுகா, சேலூர் செல்லப்பம்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தன் (வயது 23). இவரது மனைவி ராமாயி (20). கர்ப்பிணியான ராமாயி பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஒருவர், ராமாயிக்கு சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லை எனவும், பொத்தனூரில் உள்ள அவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் எனவும் கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில் ஜீவானந்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல தனக்கு வசதி இல்லை. அதனால் எங்களை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த டாக்டர் பிரசவத்திற்கு ரூ.7 ஆயிரமும், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அதற்கு உரிய சிகிச்சை அளிக்க ரூ.5 ஆயிரம் என ரூ.12 ஆயிரம் கொடுத்தால் பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சுகப்பிரசவ சிகிச்சை அளிக்கப்படும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ராமாயி அங்கேயே சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் ராமாயிக்கு அங்கு சுகப்பிரசவம் ஆகாத நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

பொதுமக்கள் முற்றுகை

அங்கு ராமாயிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து 29-ந் தேதி காலதாமதமான பிரசவத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிலிக்கல்பாளையத்தில் பிரசவத்திற்காக பணம் கேட்டு காலதாமதப்படுத்திய அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் ராமாயி மற்றும் அவரது கணவர் ஜீவானந்தம் ஆகியோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் நேற்று நாமக்கல் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனை டாக்டர்கள், திருச்செங்கோடு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் சிகிச்சைக்கு வரும் ஒவ்வொரு நோயாளியிடமும் தனது சொந்த மருத்துவமனைக்கு வர வேண்டும் எனவும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க பணம் கொடுக்க வேண்டும் எனவும் அங்குள்ள டாக்டர் வற்புறுத்தியதாக புகார் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அந்த டாக்டரை உடனடியாக இடமாற்றம் செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story