ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முற்றுகை


ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
x

அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட தம்புரெட்டிபாளையம், ராகவரெட்டிமேடு மற்றும் கம்மார்பாளையம் ஆகிய கிராமங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவற்றில் மேய்கால் புறம்போக்கு, ஏரி உள்வாய், வண்டிபாதை போன்றவைகளும் அடங்கும்.

இத்தகைய அரசுக்கு உட்பட்ட நிலங்களை தனியாரிடம் இருந்து மீட்டு அங்கு 100 நாள் வேலையை வழங்கிட கோரி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் செங்கல்வராயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெ.அருள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலன், நிர்வாகிகள் ராஜேஷ், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களும் பங்கேற்றனர். போராட்டத்தின் முடிவில் தங்களது கோரிக்கை தொடர்பாக தாசில்தார் ராமனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். மனுவை பெற்று கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story