கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
x

சிவகங்கையில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ய முயன்றபோது போலீஸ் வாகனத்தின் அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை

சிவகங்கையில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ய முயன்றபோது போலீஸ் வாகனத்தின் அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

சிவகங்கை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த கண்டனி கிராமத்தை சேர்ந்த விபின் இளவரசன் என்கிற சிறுவன் கடந்த மார்ச் 23-ந் தேதி பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கி சாலையை கடக்கும்போது அரசு பஸ் மோதி இறந்தான். இதனால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் பெற்றோர் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் மக்கள் தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதுகுறித்து அறிந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணகி, சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை கலெக்டரை சந்திக்க அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் தங்கள் கொடியுடன் தான் வருவோம் என்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதையடுத்து அவர்கள் போலீசாரின் வாகனத்திற்கு அடியிலும், முன்னாலும் படுத்து போராட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்கள். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் மூலமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். அதன் பின்னர் அவர்கள் கலந்து சென்றனர்.



Next Story