நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு


நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2023 10:08 AM GMT (Updated: 18 Oct 2023 10:10 AM GMT)

நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும், நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் சிதைத்து வருகிற நீட் தேர்வுக்கு முடிவு கட்டிட திராவிட மாடல் அரசும், தி.மு.கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி இணைந்து கடந்த ஆகஸ்ட் 20-ந்தேதி நடத்திய உண்ணாநிலை அறப்போரை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கவுள்ளோம்.

வரும் 21-ந்தேதி(சனிக்கிழமை) தமிழ்நாட்டின் அனைத்து கழக மாவட்டங்களிலும் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இந்த முயற்சியை மக்கள் பங்கெடுப்புடன் நடத்திடும் வகையில், இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்களுடனான இணைய வழி கலந்தாலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

அணிகளின் தலைவர்கள் இணை, துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்."

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story