எல்லாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆறு வழிச்சாலை பணி தற்காலிக நிறுத்தம்


எல்லாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆறு வழிச்சாலை பணி தற்காலிக நிறுத்தம்
x

எல்லாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆறு வழி சாலை பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து சமாதான கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. அந்த பணிக்கு ரூ.3,200 கோடியை மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்துக்கு ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திலுள்ள 15 கிராமங்களில் மூன்று போகம் விளையும் விவசாய நிலங்களை கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முற்பட்டது. இந்த பணியை மேற்கொள்ள கூடாது என விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், எல்லாபுரம் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சிக்கும்-வடமதுரை ஊராட்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள விளைநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் விவசாய நிலத்தை சமன் படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்த விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பத், மாநில தலைவர் துளசி நாராயணன், புன்செய் நில விவசாயிகள் சங்க தலைவர் ஸ்ரீராமுலு ரெட்டி, செயலாளர் சசிகுமார், பொருளாளர் குணசேகர் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் விவசாய நிலத்தை சமப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்கு அதிரடியாக வந்தனர்.

பின்னர் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கிருந்து சென்று பணி நடைபெற்ற விவசாய நிலத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும், விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் மாற்றுப்பாதையில் சாலை அமைக்க வேண்டும், பணி ஆணையில் உள்ள விவரங்கள் அடங்கிய பட்டியலை காண்பிக்க வேண்டும், நிலம் கையகப்படுத்த 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதலை பெற வேண்டும், மாற்றாக தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக தீர்வு கிடைக்கவில்லை. இதனால் நிலம் கையகப்படுத்தும் தாசில்தார் லியோ போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதிலும், சுமூக தீர்வு கிடைக்கவில்லை. எனவே, விவசாயிகள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதன் பின்னர், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய தாசில்தார் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் சமைத்து சாப்பிட்டு இங்கேயே போராட்டத்தைத் தொடர்வோம் என்று கூறினர்

இதனையடுத்து தற்காலிகமாக பணியை நிறுத்துவதாக தாசில்தார் ஹரி கிருஷ்ணன் கூறினார். மேலும், ஆறு வழிச்சாலை சம்பந்தமாக சமாதான கூட்டம் நடத்தப்படும் என்றும் அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு பின்னரே பணி தொடங்கும் என்றும் உறுதியளித்தார். அதன் பின்னர், அனைவரும் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரம் அங்கு பதற்றமும் பரபரப்பும் நிலவியது.


Next Story