சமூகத்துடன் ஒன்றி பழகுவது குறைந்தது தற்கொலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம்: சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர்


சமூகத்துடன் ஒன்றி பழகுவது குறைந்தது தற்கொலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம்:  சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர்
x

கொரோனா காலத்தில் சமூகத்துடன் ஒன்றி பழகுவது குறைந்து போனது தற்கொலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் கூறியுள்ளார்.


சென்னை,


இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தின் வளாக பகுதிகளில், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து இதுவரை 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, கல்வி நிறுவன வளாக பகுதிகளுக்குள் முற்றிலும் தற்கொலை தடுப்புக்கான நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறோம்.

எல்லாவற்றையும் விரைவாக அமல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என கூறி உள்ளார். தமிழகத்தில் தற்கொலைகளால் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதார இழப்புகள் என்ற அறிக்கையை சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்டது.

இதனை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை மந்திரி மா. சுப்ரமணியன் வெளியிட்டார். இந்த அறிக்கை, தமிழகத்தில் தற்கொலைகள் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் மற்றும் அதனால் ஏற்பட கூடிய சமூக பாதிப்புகள் பற்றியும் தெரிவிக்கின்றது.

இந்த அறிக்கையும் கூட, தற்கொலைகள் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் என மந்திரி மா. சுப்ரமணியன் குறிப்பிட்டார். தற்கொலைகள் எதற்கும் தீர்வல்ல என ஒவ்வொருவரிடமும் கேட்டு கொள்கிறேன். வருங்காலத்தில் தற்கொலைகளே இருக்க கூடாது என அவர் கூறியுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்த 3 தற்கொலைகளால் வேதனை அடைந்து உள்ளோம் என காமகோட்டி கூறியுள்ளார். இதனை பற்றி நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது, 4 முக்கிய காரணங்கள் தெரிய வருகின்றன.

சுகாதார விசயங்கள், கல்வி சார்ந்த நெருக்கடி, நிதி மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. ஒவ்வொரு வழக்கிலும், இந்த விவகாரங்களில் ஏதேனும் ஒன்றால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

நாட்டில் பூஜ்ய தற்கொலை எண்ணிக்கை என்பது எங்களது இலக்கு என கூறிய அவர், கொரோனா காலத்தில் சமூகத்துடன் ஒன்றி பழகுவது குறைந்து போனது தற்கொலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் கூறியுள்ளார்.

இதுபற்றி நாடாளுமன்ற மேலவையில் மத்திய கல்வி இணை மந்திரி சுபாஸ் சர்க்கார் நேற்று அளித்த எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில், நாட்டின் முன்னணி கல்வி மையங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகியவற்றில் கடந்த 2022-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2022-ம் ஆண்டில் இந்த மாணவர் தற்கொலை எண்ணிக்கை, 2019-ம் ஆண்டில் இருந்த எண்ணிக்கைக்கு இணையாக 16 ஆக உள்ளது. அவர்களில் 8 பேர் ஐ.ஐ.டி.யை சேர்ந்தவர்கள். 7 பேர் என்.ஐ.டி. மாணவர்கள். ஒருவர் ஐ.ஐ.எம். மாணவர் ஆவார் என தெரிய வந்து உள்ளது.

எனினும், இந்த புள்ளி விவரங்களின்படி, 2020-ம் ஆண்டில் 5 தற்கொலைகளும், 2021-ம் ஆண்டில் 7 தற்கொலைகளும் நடந்து உள்ளன.

கொரோனா பெருந்தொற்று பரவலின்போது வகுப்புகள் சீராக நடைபெறாத நிலையில், இந்த தற்கொலைகள் குறைந்து காணப்பட்டுள்ளன. மாணவர்களும் அதிக நேரம் வீடுகளில் செலவிட்டு வந்தனர்.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பு கவனத்திற்குரிய விசயம் என்பதுடன், கல்வி தொடர்புடைய அழுத்தம், குடும்ப விவகாரங்கள், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் மனநல விவகாரங்கள் ஆகியவை முதன்மை காரணங்களாக இருக்க கூடும் என்று அரசு தெரிவித்து உள்ளது.


Next Story