தொடரும் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


தொடரும் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x

அமராவதி பகுதியில் தொடர்ந்து கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகளால் அலட்சியத்தால் இயற்கை சீரழியும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருப்பூர்

அமராவதி பகுதியில் தொடர்ந்து கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகளால் அலட்சியத்தால் இயற்கை சீரழியும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கனிம வளங்கள்

இயற்கை வளங்கள் மிகுந்து காணப்படும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியவாறு அமைந்து உள்ளது தளி, அமராவதி பகுதிகள். மரங்கள், ஆறுகள், ஓடைகள் என கனிம வளங்களை தன்னகத்தே கொண்ட இந்த பகுதி காலங்காலமாக இயற்கையை பேணிக்காத்தும் உயிர்ப்பித்தும் வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக கனிம வளங்கள் நிறைந்த இந்த பகுதியை குறி வைத்து மாபெரும் சட்டவிரோத கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் தட்பவெப்ப நிலை மாற்றமும், இயற்கையைச் சார்ந்து வசித்து வருகின்ற உயிரினங்கள் அழிந்து வரும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது:-

அமராவதி பகுதியில் மண் கடத்தலில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை பணிக்காக மண் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் எதற்கும் உதவாத கிராவல் மண்ணை அள்ளிச் செல்வதற்கு பதிலாக உயிர்ப்பு தன்மையுடைய அரிய வகை உயிரினங்கள் வசிக்கும் மண்ணை தேடித் தேடி அள்ளிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

அதை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதை சாதகமாகக் கொண்ட ஒரு சிலர் உயிர்ப்பு தன்மை மிக்க வளம் நிறைந்த மண்ணை முறையாக அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக லாரி லாரியாக அள்ளிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக இரவு பகலாக மண் கடத்தல் தங்கு தடை இன்றி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக மலை அடிவாரப் பகுதியில் 10 அடிக்கும் மேலாக பள்ளம் போன்ற அமைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் உணவை தேடிக்கொண்டு வருகின்ற வனவிலங்குகள் நிலை தடுமாறி விழுந்து காயம் அடையும் சூழலும் ஏற்பட்டு உள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்

மேலும் மண்ணைக் கொண்டு செல்லும் லாரிகளால் உடுமலை பகுதி சாலைகளும் படிப்படியாக சேதம் அடைந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் சாலைப்பயன்பாடும் போக்குவரத்தும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் சாலைகளில் சிதறி வருகின்ற மண் குவியல் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்துவதுடன் வாகன ஓட்டிகள் கண்களை பதம் பார்ப்பதால் நிலை தடுமாறி அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இரவு நேரத்தில் அசுர வேகத்தில் அணிவகுத்துச் செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அமராவதி பகுதியில் ஆய்வு செய்து கடத்தலை தடுத்து நிறுத்தி இயற்கை மற்றும் கனிம வளங்களை காப்பாற்றுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் கடத்தலுக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story