அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: சூழ்ச்சியை முறியடிப்போம் - எடப்பாடி பழனிசாமி


அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: சூழ்ச்சியை முறியடிப்போம் - எடப்பாடி பழனிசாமி
x

அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்வதாகவும், அந்த சூழ்ச்சியை முறியடிப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடாப்பிடியாக இருப்பதால், அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பொதுக்குழுவில் தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக வெளியாகும் தகவல்களால் கலக்கம் அடைந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அவரது இல்லத்தில் குவிந்து வருகிறார்கள்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது. இந்த சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழுவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி 23ந் தேதி நடத்த வேண்டும் என 2300க்கும் அதிகாமன பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளதாகவும், பொதுக்குழுவை நடத்தவும், அதில் தவறாமல் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு மாவட்டசெயலாளர்கள் மூலம் கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஒற்றைத் தலைமை குறித்து தனித் தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்வதாகவும், சூழ்ச்சியை முறியடிப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் பேசிய அவர், "பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கட்சியை பலவீனமாக்க சிலர் முயல்கின்றனர். அதனை முறியடிப்போம். அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. நானே முன்னின்று காத்து நிற்பேன்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

1 More update

Next Story