எஸ்.பி.வேலுமணி வழக்கு; தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என ஐகோர்ட் உத்தரவு


எஸ்.பி.வேலுமணி வழக்கு; தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என ஐகோர்ட் உத்தரவு
x

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சென்னை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையும் இதில் அறிக்கை தாக்கல் செய்தது. எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. மேலும் 2 ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை ஐகோர்ட் நிராகரித்ததுள்ளது. அதே சமயம் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story