ரூ.605 கோடியில் கூட்டு குடிநீர் திட்டப்பணிக்கு பூமி பூஜை- சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்


ரூ.605 கோடியில் கூட்டு குடிநீர் திட்டப்பணிக்கு பூமி பூஜை- சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
x

வடக்கன்குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.605 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டப்பணியை சபாநாயகர் அப்பாவு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, பாளையங்கோட்டை மற்றும் சேரன்மாதேவி யூனியன்களில் உள்ள 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடியே 75 லட்சம் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று வடக்கன்குளத்தில் நடைபெற்றது.

இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

இந்த கூட்டு குடிநீர் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். இதையடுத்து ரூ.605 கோடியே 75 லட்சம் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அவர் அனுமதி அளித்தார். இந்த திட்டத்துக்கு கடந்த மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் நெல்லை அருகே உள்ள மேலமுன்னீர்பள்ளம் தாமிரபரணி ஆற்றில் நீர்சேகரிப்பு கிணறு அமைக்கப்படுகிறது. அங்கிருந்து பெறப்படும் தண்ணீர் சிங்கிகுளம் கிராமத்தில் ரூ.23 லட்சம் செலவில் அமைக்கப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, பிரண்டை மலையில் உள்ள 9½ லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள முதலாவது தலைமை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தெற்கு வள்ளியூரில் உள்ள 6½ லட்சம் லிட்டர் தலைமை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும், ராதாபுரம் தலைமை நீர்த்தேக்க தொட்டிக்கும் ஏற்றப்படுகிறது.

3 தலைமை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து 54 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து பயன்பாட்டில் உள்ள 1,176 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள 162 நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் 65,434 வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளும் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளை 15 மாதங்களுக்குள் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராமலட்சுமி, உதவி நிர்வாக பொறியாளர்கள் டேனீஸ், மயில் வாகனம், ராமசாமி, பங்குதந்தை மார்ட்டின், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, வள்ளியூர் யூனியன் துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், வடக்கன்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜான் கென்னடி மற்றும் பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story