ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க சிறப்பு முகாம் - சென்னை மாநகராட்சி தகவல்
ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் சென்னை மாநகராட்சியில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு மாதம் சலுகை
சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண்டும் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெறுபவரின் ஓய்வு பெற்ற மாதம் கணக்கில் கொண்டு வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் கருணைத் தொகை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்தில் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்.
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு பிரிவு ஓய்வூதியம் பெறுபவர் உயிர்சான்று அளிக்கப்பட வேண்டிய மாதத்தில் அளிக்க தவறினால் அடுத்து வரும் ஒரு மாதம் சலுகை அளிக்கப்படும். அந்த சலுகை மாதத்துக்குள் உயிர்வாழ்சான்று அளிக்காத பட்சத்தில் அடுத்து வரும் மாதத்தில் இருந்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்படும். இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உயிர்வாழ் சான்று அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் ஜூலை மாதத்துக்குள் வாழ்நாள் சான்று அளிக்கலாம்.
சிறப்பு முகாம்
இதில், 2023-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ஜூலை முதல் ஆகஸ்டு மாதம் வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரிப்பன் கட்டிடத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. அப்போது, ஓய்வூதிய புத்தகம் அசல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டையுடன் நேரில் வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.