கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஏதுவாக சென்னையில் 24-ந் தேதி முதல் 2 கட்டங்களாக சிறப்பு முகாம் - விதிமுறைகள் வெளியீடு


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஏதுவாக சென்னையில் 24-ந் தேதி முதல் 2 கட்டங்களாக சிறப்பு முகாம் - விதிமுறைகள் வெளியீடு
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஏதுவாக சென்னையில் வரும் 24-ந் தேதி முதல் 2 கட்டங்களாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான விதிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை

சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்னப்பபதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்பபதிவு முகாம் வரும் 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடைபெறும். ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார். டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்களுக்கு முன்பாக தொடங்கும். பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற ரேஷன் கடைக்கு வரத்தேவையில்லை.

விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பபதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்தவர வேண்டும். சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் எடுத்துவர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் முகாம் நடைபெறும். முகாம் நடைபெறும் தெரு, வார்டு, நாள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

முகாமில், பயனாளிகளின் விரல்ரேகை பதிவு சரியாக அமையவில்லை என்றால், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) பெறப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்ற குடும்பங்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். 2002-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை உள்ள முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரின் மனைவி குடும்பத்தலைவியாக கருதப்படுவார். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவியாக கருதப்படுவர். இதுகுறித்து, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையின் 044-25619208, 9445477205, 1913 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி,

மண்டலம் 1- 9445190201,

மண்டலம் 2- 044-25941079, மண்டலம் 3- 9445190203,

மண்டலம் 4- 9445190204,

மண்டலம் 5- 9445190205, மண்டலம் 6- 9445190206,

மண்டலம் 7- 9445190207,

மண்டலம் 8- 9445190208, மண்டலம் 9- 9445190209, மண்டலம் 10- 9445190210, மண்டலம் 11- 9445191432, மண்டலம் 12- 9445190212, மண்டலம் 13- 9445190213, மண்டலம் 14- 9445190214, மண்டலம் 15- 9445190215.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story