மலைவாழ் மக்களுக்காக கடனுதவி வழங்க 19-ந் தேதி சிறப்பு முகாம்


மலைவாழ் மக்களுக்காக கடனுதவி வழங்க 19-ந் தேதி சிறப்பு முகாம்
x

ஜமுனாமரத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி மலைவாழ் மக்களுக்காக கடனுதவி வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று தாட்கோ தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

ஜமுனாமரத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி மலைவாழ் மக்களுக்காக கடனுதவி வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று தாட்கோ தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.

தாட்கோ தலைவர் ஆய்வு

ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட பட்டறை காடு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ரூ.46 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகளும், ஆட்டியனூர் பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ரூ.46 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகளும்,

அரசுவெளி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் ரூ.51 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 3 வகுப்பறைகளும் என ரூ.1 கோடியே 43 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை தாட்கோ தலைவர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆதிதிராவிடர் நல பள்ளிகள் செயல்பாடு எப்படி உள்ளது என்றும், மாணவர்களின் கல்வித்திறன் எப்படி உள்ளது என்றும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கட்டிடத்தின் வசதிகள் குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடங்கள் குறித்தும் பார்வையிடப்பட்டது.

தற்போது ஜமுனாமரத்தூரில் 3 இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 3 மாதங்களில் முடிவடையும்.

சிறப்பு முகாம்

மேலும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை திறன் உயர்வதற்காக தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்காக வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஜமுனாமரத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து பகுதி மலைவாழ் மக்களையும் அழைத்து விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தி 50 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்க சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மலைவாழ் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும் கூடுதலாக 2 இடங்களில் புதிதாக விடுதிகள் கட்டுவதற்கும், கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பதற்கும் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மேலாளர் ஏழுமலை, தாட்கோ செயற்பொறியாளர் சுதா, உதவி செயற்பொறியாளர்கள் இமாம்காசிம், கண்ணன், ஒன்றியத் தலைவர் ஜீவா, துணைத்தலைவர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் கேசவன் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story