தேவகோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
தேவகோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 22-ந்தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டகலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
சிவகங்கை மாவட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 22-ந்தேதி. தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID), விண்ணப்பம் பெறுதல் மற்றும் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 6, ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற UDID அட்டை முக்கியமான ஆவணமாக கருதப்படுவதால், இது நாள்வரை UDID அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடைய வேண்டும். மேலும், ஏற்கனவே மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகலினை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் முகாம் நடைபெறும் நாளில் ஒப்படைத்து பராமரிப்பு உதவித்தொகையினை தொடர்ந்து பெற்று பயன்பெறுவதற்கும் ஏதுவாக இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.