கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரெயில்


கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு  இன்று  சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 28 Jan 2024 4:14 AM GMT (Updated: 28 Jan 2024 6:45 AM GMT)

நான்கு நாள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக 2 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று வரை நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதையொட்டி சென்னையில் வசித்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படை எடுத்தனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயணிகள் கூட்டத்தால் திணறியது.

நாளை திங்கள் கிழமை என்பதால் பயணிகள் சென்னை திரும்ப தயாராகி வருகிறார்கள். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னைக்க்கு வரும் பஸ்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. ரெயில்களிலும் டிக்கெட் இல்லை. பயணிகள் கூட்டம் இன்று அலைமோதும் என்பதால் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கன்னியாகுமரி சென்னை சிறப்பு ரயில், (வண்டி எண் 06041) கன்னியாகுமரியில் இருந்து 28 ஆம் தேதி (இன்று) இரவு 8.30 மணிக்கு புறப்படும். நெல்லைக்கு 10.15 மணிக்கு வரும் இந்த ரயில் 10.20 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுநாள் காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இதேபோல் சென்னை - கன்னியாகுமரி சிறப்பு ரயில், (வண்டி எண் 06042) வரும் 29 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்து சேரும்.

அதேபோல், கோவையில் இருந்தும் இன்று சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. கோவையிலிருந்து இரவு 11.30க்கு இந்த ரெயில் புறப்பட்டு, ஜனவரி 29ம் தேதி நள்ளிரவு 12:10 க்கு திருப்பூரைச் சேருகிறது. அங்கிருந்து நள்ளிரவு 1 மணி அளவில் ஈரோடு வருகிறது.

2 மணிக்கு சேலம், 3: 55 மணிக்கு ஜோலார்பேட்டை, காலை 5 மணிக்கு காட்பாடி, 6:43 க்கு அரக்கோணம், 7:38 மணிக்கு பெரம்பூர் மற்றும் காலை 8:30க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இந்த ரெயில் வந்து அடைகிறது.

29-ம் தேதி மதியம் 1:45க்கு சென்னையில் இருந்து மீண்டும் புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 11: 05 மணிக்கு கோவை வந்து சேர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story