ஒடிசாவில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரெயில்: பயணிகளை வரவேற்க தயார் நிலை
ஒடிசாவில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பயணிகள் இன்று சென்னை வர உள்ளநிலையில் போலீசார், டிடிஆர்எப் மற்றும் கமாண்டோக்கள் காத்திருக்கின்றனர்.
சென்னை,
கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் மூலம் ரெயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறப்பு ரெயிலில் வரும் பயணிகளை வரவேற்க சென்னை ரெயில் நிலையத்திற்கு வெளியே போலீசார், டிடிஆர்எப் மற்றும் கமாண்டோக்கள் காத்திருக்கின்றனர். மேலும் ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றன.
முன்னதாக இதுதொடர்பாக, சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் எஸ்.பி. பொன்ராமு நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "உதவி மையத்தை பயணிகள் சுலபமாக கையாளும் வகையில் சென்டிரல் ரெயில் நிலையத்தை சுற்றி 200 ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாளை (இன்று) காலை 250 பேர் சிறப்பு ரெயில் மூலம் ஒடிசாவில் இருந்து சென்னை வருகிறார்கள். இவர்களை முறையாக ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். ரெயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்ற விவரம் இதுவரையில் எங்களுக்கு வரவில்லை.
ரெயிலில் முன்பதிவு செய்யாமல் ஏராளமானோர் பயணம் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே, தகவல் மையத்தை தொடர்புகொள்ளும் நபர்களின் உறவினர்கள் யாரேனும் ரெயிலில் பயணம் செய்துள்ளார்களா? என்று கேட்டறிந்து உடனுக்குடன் தகவல்களை சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு தெரிவித்து வருகிறோம். எங்களின் உயர் அதிகாரிகள் ஒடிசாவிற்கு சென்றுள்ளார்கள். அங்கே நிலை என்னவாக இருக்கிறது என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்திருந்தார்.