18 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில்காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


18 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில்காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 July 2023 7:30 PM GMT (Updated: 24 July 2023 7:31 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். இது குறித்து அவர் முகாமில் பேசியதாவது:-

அரசு பஸ்சில் இலவச பயணம்

நான் கோட்டைக்கு சென்று முதன் முதலில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டத்தை செயல்படுத்த முதல் கையெழுத்து போட்டேன். கடுமையான நிதி நெருக்கடி இருந்த நிலையில், அரசு போக்குவரத்து கழகத்தின் நிதி நிலை மோசமாக இருந்த போதிலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் மூலம் 36 லட்சம் பெண்கள் 283 கோடி முறை அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதன் மூலம் அந்த பெண்கள் மாதம் ரூ.800 முதல் ரூ.1000 வரை சேமிக்க முடிகிறது. அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வி பெற ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் அற்புதமான திட்டம் ஆகும். இந்த திட்டம் மூலம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறுகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 652 மாணவிகள் இந்த திட்டம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

காலை சிற்றுண்டி திட்டம்

நீதி கட்சி தலைவராக இருந்த தியாகராஜர் ஏழை மாணவ, மாணவிகள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலில் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பின்னர் முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் விரிவுபடுத்தி சிறப்பாக செயல்படுத்தினார். இதையடுத்து எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டமாக மாற்றி மேம்படுத்தினார். உண்மையான சத்துணவாக மாற்ற கலைஞர் முட்டையுடன் சத்துணவு வழங்கினார். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 99 சதவீதம் பேர் காலை உணவு சாப்பிடாமல் வருகிறார்கள். அதனால் வகுப்பறைகளில் பாடங்களில் அவர்களால் உரிய கவனம் செலுத்த முடியவில்லை. இதைக்கருத்தில் கொண்டு காலை உணவு திட்டம் முதல் கட்டமாக குறிப்பிட்ட பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 2 லட்சம் பேர் பயன்பெற்று வந்தனர். இந்த மாதம் முதல் இந்த திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story