புதிய தொழில்முனைவோர்அரசின் மானிய கடனுதவியை பெற்று சுய தொழில் தொடங்க முன்வர வேண்டும்வழிகாட்டுதல் முகாமில் கலெக்டர் சாந்தி பேச்சு


புதிய தொழில்முனைவோர்அரசின் மானிய கடனுதவியை பெற்று சுய தொழில் தொடங்க முன்வர வேண்டும்வழிகாட்டுதல் முகாமில் கலெக்டர் சாந்தி பேச்சு
x
தினத்தந்தி 22 Sep 2023 7:30 PM GMT (Updated: 22 Sep 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

புதிய தொழில் முனைவோர் அரசின் மானிய கடனுதவியை பெற்று சுய தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த வழிகாட்டுதல் முகாமில் கலெக்டர் சாந்தி பேசினார்.

வங்கி கடன்

தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக செயல்படுத்தி வருகிறது. புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோருக்கு தேவையான கடன் வசதியை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தருவதற்கான மாவட்ட அளவிலான வங்கி கடன் வழிகாட்டுதல் முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற துறைகள் அனைத்து வங்கிகளுடன் இணைந்து அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2 மாதங்களில் இதுவரை 1,639 பயனாளிகள் ரூ.111.5 கோடி கடன் பெற்றுள்ளனர். இந்த திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கு தொழில் முனைவோர் விண்ணப்பித்து மானிய உதவியுடன் கடன்களை பெற்று சுய தொழில்களை தொடங்க முன்வர வேண்டும் என்று பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

இந்த முகாமில் பல்வேறு தொழில் கடன் திட்டங்களின் கீழ் 24 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஒப்பளிப்பு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இந்த முகாமில் மாநில அரசின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் கார்த்திகைவாசன், நிதி ஆலோசகர் வணங்காமுடி, தொழில் ஊக்குவிப்பு அலுவலர் வெங்கடேஸ்வரி, ரிசர்வ் வங்கி மேலாளர் கிருஷ்ணகுமார், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத் தலைவர்கள் வெங்கடேஷ் பாபு, சரவணன், நெல் அரவை முகவர்கள் சங்கத் தலைவர் பாஸ்கர், வணிகர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story