'தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது'; முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சாடல்


தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது; முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சாடல்
x

தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

திண்டுக்கல்

சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு என விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நத்தம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, மணிகண்டன், சின்னு, சுப்பிரமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் சேக்தாவூது வரவேற்றார்.

இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தற்போது சொத்து வரி, பால் விலையை உயர்த்துவிட்டனர். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறி தி.மு.க.வினர் அப்போது போராட்டம் நடத்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக மின்கட்டணத்தை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்றார்.

முன்னதாக நத்தம் விசுவநாதன் பேசும்போது, சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது தொண்டர்கள் அமைதியாக இருக்கும் படி விசுவநாதன் கேட்டு கொண்டார். அதன் பின்னர் நத்தம் விசுவநாதன் அமைச்சர் பேச்சை தொடர்ந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் பார்வதி, சின்னாக்கவுண்டர், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ், சவரிமுத்து, உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல், நகர அவைத்தலைவர் சேக்ஒலி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story