சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி நிலையப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணைமின் உற்பத்தி நிலையப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மோகனூர்
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இணை மின் உற்பத்தி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மதிவேந்தன் ஆகியோருடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆலையில் இணை மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது நிறைவு நிலையில் உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-
தமிழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், 6 இடங்களில் இணை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. தமிழக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து, மின்வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி, இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதில் முதல் கட்டமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும், 15 மெகாவாட் திறன் கொண்ட இணை மின் உற்பத்தி நிலைய கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
மின்சாரம் உற்பத்தி
மேலும் ஆலையில் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணை மின் உற்பத்தி நிலைய பணிகள், 10 ஆண்டுகளில் கிடப்பில் போடப்பட்டதால், அதனுடைய திட்ட மதிப்பு தற்போது ரூ.2,500 கோடியாக உயர்ந்துள்ளது. இருந்தும் அப்பணிகளை விரைந்து முடித்து மின் உற்பத்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இப்பகுதி கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, மோகனூர் சர்க்கரை ஆலையில், இணை மின் உற்பத்தி நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வரும் ஜூலை மாதத்திற்குள், அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இணைய மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சிக்கொடி ஏற்றினார்
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர் வக்கீல் கைலாசம், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவலடி, மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் மல்லிகா நன்றி கூறினார்.
முன்னதாக மோகனூர் அடுத்த குத்தாங்கல்மேட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட 70 அடி உயர கட்சிக்கொடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.






