ஜப்பான் - இந்திய நட்புறவு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


ஜப்பான் - இந்திய நட்புறவு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

ஜப்பான் - இந்திய நட்புறவு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கலாசார நிகழ்ச்சி

ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார்.

நினைவு பரிசு

இந்த கலாசார சந்திப்பு நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு முதல்-அமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான 84 வயதான அகிமி சகுராயுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

இந்திய மக்களின் கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

7 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக வந்துள்ளேன். இந்தியாவுக்கே பெருமையும், வளமும் சேர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தொன்மையையும், பழமையையும், கீழடியும், பொருநையும் இன்று உலகுக்கே அடையாளம் காட்டி வருகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக உங்களை இங்கு சந்திக்க வந்திருக்கிறேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

பெண்கள் அனைவருக்கும் நகர பஸ்களில் இலவசப் பயணம் - அனைத்து மாணவர்களையும் அனைத்து தகுதியும் கொண்டவர்களாக மாற்றும் 'நான் முதல்வன் திட்டம்' - பள்ளிகளில் மதிய சத்துணவோடு காலையிலும் உணவு என குழந்தைகள் - மாணவர்கள் - இளைஞர்கள் - பெண்கள் ஆகிய அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காக தி.மு.க. ஆட்சி செயலாற்றி வருகிறது. எங்களின் இந்த திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கி இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப் பெரிய அளவில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம்.

கலாசார தொடர்புகள்

அதற்கு அழைப்பு விடுக்கத்தான், இந்த சுற்றுப்பயணம். நிசான், தோஷிபா, யமஹா, உள்ளிட்ட மிகப்பெரும் ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான நட்பு என்பது பரந்த அடிப்படையில் - செயல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு நினைக்கிறது. வர்த்தக உறவுகளையும் தாண்டிய நட்புறவாக அவை அமைய வேண்டும்.

ஜப்பான் - இந்திய நட்புறவானது, புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்பதை நானும் வலியுறுத்த விரும்புகிறேன். 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே ஆன ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. 'மீண்டும் ஜப்பான் - துடிப்பான இந்தியா - புதிய பார்வைகள் புதிய பரிமாற்றங்கள்' என்று அதற்கு தலைப்பு தரப்பட்டு 2 நாட்டிலும் கலாசார விழாக்கள் நடைபெற்றன. இத்தகைய கலாசார தொடர்புகள் தொடர வேண்டும்.

பாராட்டு

ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கான இந்திய தூதர் நிக்கிலேஷ் கிரிக்கும் சிறப்பாக பணியாற்றி, ஜப்பானில் உள்ள இந்திய சங்கங்களுக்கு இணைப்புப் பாலமாக இருப்பதற்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கு முன்பு, மேயர்கள் மாநாட்டுக்கு 1997-ம் ஆண்டும், சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்கான மெட்ரோ ரெயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு 2008-ம் ஆண்டும், நான் ஜப்பானுக்கு வந்திருக்கிறேன்.

முதலீட்டாளர்களை அழைத்துவர வேண்டும்

அப்படிப்பட்ட ஜப்பான் நாட்டில் உள்ள முதலீட்டாளர்களிடம் தமிழ்நாட்டில் நிலவும் தொழில் தொடங்குவதற்கு ஏற்றச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நீங்கள் எல்லாம் எடுத்துக்கூற வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்துவர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வே.விஷ்ணு, ஒசாகாவிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story