நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல்.!


நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல்.!
x
தினத்தந்தி 7 Oct 2023 4:40 AM GMT (Updated: 7 Oct 2023 4:48 AM GMT)

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்தவர்கள் மணியன் (வயது 55), வேல்முருகன் (27), சத்யராஜ் (30), அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கோடிலிங்கம் (53). இவர்கள் 4 பேரும் மீனவர்கள்.நேற்று மாலை இவர்கள் அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க புறப்பட்டனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் நள்ளிரவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு படகில் 3 இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மீனவர்கள் படகில் ஏறி கத்தியை காட்டி பொருட்களை கொடுக்குமாறு மிரட்டினர்.

பின்னர் மீனவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து தப்பினர். இலங்கை கடற்கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குதலால் மீனவர்கள் மணியன், கோடிலிங்கம், வேல்முருகன், சத்தியராஜ் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் காயத்துடன் வேக வேகமாக கரைக்கு திரும்பி உறவினர்களிடம் நடந்த விவரங்களை கூறினர். அதனை தொடர்ந்து 4 பேரும் ஆம்புலன்சில் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடரும் அட்டூழியம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story