ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது: முதல் அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்


தினத்தந்தி 26 Jan 2024 3:26 AM GMT (Updated: 26 Jan 2024 5:30 AM GMT)

அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதல் -அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

சென்னை,

குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று தமிழக அரசின் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கினார். இது குறித்த விவரம் வருமாறு:

*அரசு பள்ளிக்கு 7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதல் அமைச்சரின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று வழங்கினார்.

*ஆல்ட் நியூஸ் முகம்மது ஜூபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது.சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உண்மையை வெளியிடுவார் முகம்மது ஜூபைர் .பொய்யான செய்தியால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளை தடுக்க முகம்மது ஜுபைரின் பணி உதவி செய்கிறது.

*மதுரை மாநகரம் சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் அமைச்சரின் விருதை பெற்றது. நாமக்கல், பாளையங்கோட்டை ஆகியவை முறையே சிறந்த காவல் நிலையத்திற்கான 2-ம் மற்றும் 3-ம் பரிசை பெற்றது

*வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டதற்காக தூத்துக்குடியை சேர்ந்த சிவக்குமாருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. கனமழை மீட்பு பணியில் ஈடுபட்ட திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் செல்வசிங்க்; தூத்துக்குடி சிங்கித்துறையை சேர்ந்த மீனவர் யாசர் அராபத் ஆகியோருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. 9 ஆயிரம் மதிப்பு தங்க முலாம் பூசிய பதக்கத்துடன் ரூ.1 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது

*நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது சேலத்தை சேர்ந்த பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.


Next Story